இந்தியா

`என் தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்’ - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவேசம்

`என் தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்’ - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவேசம்

ஜா. ஜாக்சன் சிங்

"எனது தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்" என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மும்பையில் அரசுக் குடியிருப்புகளை மறுநிர்மாணம் செய்வதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கடந்த 1-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு 20-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதிலும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதுகுறித்து சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எந்த மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை. சிவசேனா நிறுவனர் பாலாசாஹேப் தாக்கரேவின் மீது உறுதியிட்டு இதை கூறுகிறேன். பாலாசாஹேப் எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்துள்ளா். அதனால் சிவசேனாவுக்காக இறுதிவரை நான் போராடுவேன். தவறான ஆதாரங்கள் அடிப்படையில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த தருணத்திலும் சிவசேனாவில் இருந்து விலக மாட்டேன். என் தலையை கொய்தாலும் சரி, நான் இறந்தாலும் சரி. பாஜகவிடம் நான் சரணடைய மாட்டேன்" என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே உட்பட 40 எம்எல்ஏக்கள் பிரிந்து தனி அணியை உருவாக்கினர். பின்னர் இந்த அணியுடன் பாஜக கூட்டணி அமைத்ததால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. அதன்பின் தற்போது ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்ட்ரா முதலவராக பதவியேற்றுள்ளார்.