இந்தியா

ஈரோடு இடைத்தேர்தல்: இபிஎஸ் மனு மீது தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல்: இபிஎஸ் மனு மீது தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை அங்கீகரிக்கவும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ளவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மனு மீது, அடுத்த மூன்று தினங்களுக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் ஒரு தரப்பினரால் கட்சி விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கி அதில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், மனுதாரர் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்திருந்தது. மேலும் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுது.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் யாருக்கு என்ற பிரதான கேள்வி எழுந்தது. இதற்கிடையில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி, “இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு நான் அனுப்பும் வேட்பாளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து திங்கட்கிழமை முறைப்படி வந்து முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி இன்று காலை நீதிமன்ற அலுவலகம் தொடங்கியவுடன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில், முன்பு எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். அப்போது அவர், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக இடை ஈட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாகவும் இதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து முறையீட்டை ஏற்று உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், “எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் வழங்க வேண்டும். அதன் மீது அடுத்த மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்” என அறிவித்தனர்.

மேலும் நீதிபதிகள், “இந்த விவகாரம் அசாதாரண சூழலாக மாறி இருப்பதால் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க காலதாமதம் செய்ய வேண்டாம்” என கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த வழக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்றும், அதை தாண்டி வேறு எந்த ஒரு விவகாரமும் கட்டாயம் பரிசீலிக்கப்படாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.