பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால்தான் ரயிலை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதாக அதன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாகச் சென்ற ரயில் அவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிச் சென்றது. இந்த விபத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் நின்ற இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தண்டவாளப்பாதையில் வளைவு இருந்ததால் ரயில் ஓட்டுநர் மக்கள் கூடியிருந்ததை கவனிக்க இயலவில்லை என்றும் ராவண பொம்மை கொளுத்தப்பட்டதால் ஏற்பட்ட புகையாலும், பனிப்பொழிவாலும் தண்டவாளத்தில் ரயில் வருவதை மக்களாளும், மக்கள் நிற்பதை ரயில் ஓட்டுநனராலும் காண இயலவில்லை எனக் கூறப்படுகிறது. பட்டாசு சத்தம் அதிகமாக இருந்ததால் ரயில் சத்தத்தை மக்களால் கேட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்து குறித்து பேசியுள்ள ரயில் ஓட்டுநர், தசரா கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால்தான் ரயிலை வேகமாக இயக்கியதாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள உள்ளூர் மக்கள் ரயில் ஓட்டுநர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கும்பலமாக நிற்பதை கண்டும் ரயிலை நிறுத்தாமல் சென்றதால் ஏராளமானவர்கள் உயிரிழந்ததாகவும், விபத்து என்பதை தெரிந்தும் கூட ரயிலை நிறுத்த முயற்சி செய்யவில்லை என்றும், விபத்து நடந்த சமயத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதை விடுத்து, ரயில் மீது எப்படி கல்லெறிய முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.