இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி... நிலைக்குழு பரிசீலனைக்கு செல்கிறது மின்சார சட்டத் திருத்த மசோதா

எதிர்க்கட்சிகள் அமளி... நிலைக்குழு பரிசீலனைக்கு செல்கிறது மின்சார சட்டத் திருத்த மசோதா

webteam

திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து, மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக மக்களவையில் இந்த மசோதா கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தன. ஆகவே இந்த மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என அமைச்சர் ராஜ் குமார் சிங் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்தார். அப்போது குறிப்பிட்ட திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “இந்த மசோதா மக்களுக்கு எதிரானது. மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் வகையில்” எனக்கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரியும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த மசோதா விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் கிடைப்பதை தடுக்கும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதேபோலவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சௌகதா ராய் உள்ளிட்டோரும் இந்த மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பிஜு ஜனதாதளம் கட்சியின் பினாகி மிஸ்ரா மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்படுவதால், மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கலாம் என பேசினார்.

அப்போது விளக்கம் அளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ராஜ் குமார் சிங், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவின் நோக்கங்களை புரிந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டார். மேலும் “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதையோ அல்லது பிற சலுகைகளை அளிப்பதையோ இந்த மசோதா தடுக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மசோதாவை தாக்கல் செய்ய சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார். ராஜ் குமார் சிங் மசோதாவை தாக்கல் செய்தவுடன், திமுக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்களவையில் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இவற்றை தொடர்ந்துதான் தற்போது இந்த மசோதாவை மின்சாரத்துறை விவகாரங்களை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஞானதிரவியம், செல்லகுமார் மற்றும் வேலுசாமி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுடன் இந்தக் குழுவில் மக்களவையை சேர்ந்த 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை சேர்ந்த 10 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு மின்சார சட்டத் திருத்த மசோதா நிலை குழுவின் பரிசீலனைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.