குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தலைமை தேர்தல் ஆணையம். மாலை 3 மணிக்கு தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் வெளியிட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலாக உள்ளன. குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
குஜராத்தில் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா ஜ.க.99, காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. தற்போது குஜராத் சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 111, காங்கிரஸ் கட்சிக்கு 63 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் 92. இமாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற இடங்கள் 68. இம்மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இமாச்சல பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸூக்கு 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தல் அடுத்த வரும் 5 மாநிலங்களுக்கான முன்னோட்டமாக இருக்கும் தேர்தல் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த 2 மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில வாரங்களாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இந்த 2 மாநிலங்களிலும் கட்சி தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.