நித்யானந்தா தங்களது நாட்டில் தீவு எதையும் வாங்கவில்லை, அப்படி எதனையும் நாங்கள் விற்கவும் இல்லை என்று ஈகுவடார் அரசு விளக்கமளித்துள்ளது.
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் ஒட்டுமொத்த குஜராத் காவல்துறையும் குழம்பிக் கொண்டிருக்கும் சூழலில், எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு, ஆன்லைனில் ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. பாலியல் புகார், கடத்தல் புகார், கொலை குற்றச்சாட்டு என எட்டுத்திசைகளிலும் பிரச்னைகள் சூழந்து வந்தாலும், நித்தமும் அசராத நித்தியானந்தா, ஆன்லைன் வாயிலாக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக நித்தியானந்தா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கும் வலைதளத்தில் பல அறிவிப்புகள் வெளியாகின.
அதில், ஈகுவடாரில் உள்ள ஒரு தீவானது ‘ரிபப்ளிக் ஆப் கைலாசா' என்ற இந்து நாடாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் கைலாசாவுக்கென தனிக் கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் நித்தியானந்தாவும், மறுபக்கத்தில் ரிஷப வாகனமும் கொண்டதாக அந்தக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை அலுவல் மொழிகளாக கைலாசா தீவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கைலாசா நாட்டுக்கு செல்ல தனி பாஸ்போர்ட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு அமைச்சரவையை அமைக்கும் பணிகளும், 10-க்கும் மேற்பட்ட துறைகளை உருவாக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈகுவடாரில் நித்யானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை ஈகுவடார் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில் "நித்தியானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்படவில்லை. அதுபோலவே, நித்யானந்தாவுக்கு ஈகுவடார் அருகே தீவு எதையும் விற்கவில்லை. இதுதொடர்பாக அவர் சார்பாக இணையதளங்களில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் தவறானவை. அதில் உண்மையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நித்தியானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் மறுத்து விட்டதாகவும் ஈகுவடார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு நித்தியானந்தா தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.