இந்தியா

’ரோடு ஒரே குண்டும் குழியுமா இருக்குங்க!’-பேட்டியின் போதே பின்னால் சாலையில் கவிழ்ந்த வாகனம்

’ரோடு ஒரே குண்டும் குழியுமா இருக்குங்க!’-பேட்டியின் போதே பின்னால் சாலையில் கவிழ்ந்த வாகனம்

JananiGovindhan

சாலைகளில் மேடு பள்ளங்கள் இருப்பதும், அதனால் ஏற்படும் பல பாதிப்புகள் குறித்த பதிவுகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் பலியா பகுதியில் பல நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதன்படி பலியா பகுதியைச் சேர்ந்த ப்ரவிர் குமார் என்பவர் பொத்தலும், பள்ளமுமாக இருக்கும் சாலை குறித்து செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போதே அவர் பின்னால் சென்ற எலக்ட்ரிக் ரிக்‌ஷா ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விழுந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஒரு பெண் உட்பட ரிக்‌ஷா ஆட்டோவில் வந்தவர்கள் அனைவரும் அந்த பள்ளத்தில் சிக்கினார்கள். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பலரும் பதறியபடி வந்து பள்ளத்தில் சிக்கியவர்களை கஷ்டப்பட்டு மீட்டனர்.

மோசமான சாலை காரணமாக இதுபோன்று ஒரு நாளைக்கு பலியா பகுதியில் 20 முறை விபத்து நடப்பதாகவும் நான்கு ஆண்டுகளாக இது கண்டுகொள்ளப்படாமலேயே இருப்பதாகவும் ப்ரவிர் குமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அந்த சகதியிலும், பள்ளத்திலும் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.