இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் சாமானியனையும் நிருபராக மாற்றிவிடுகிறது. கையில் செல்போனும், நெஞ்சில் தில்லும் உள்ள யார் வேண்டுமானாலும் நிருபராக மாறலாம் என்ற காலம். தொழில்முறை நிருபர்கள் சொல்ல தவறிய சில செய்திகளை இந்த சாமானிய நிருபர்கள் சொல்லி வருகின்றனர்.
அப்படிப்பட்ட சாமானிய நிருபர்களில் ஒருவர்தான் காஷ்மீரை சேர்ந்த அந்த சிறுமி. தனது பகுதியில் உள்ள மோசமான சாலையின் நிலையை எடுத்துக் கூறும் விதமாக நிருபராக அவதரித்து, கையில் மைக் பிடித்துள்ளார். அதில் அந்த சாலையின் நிலை குறித்தும், அதில் உள்ள பள்ளங்கள் குறித்தும் பேசி உள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினர் அந்த சாலையில் வீசியுள்ள குப்பை குறித்தும் அதில் பேசி உள்ளார். இதனால் தங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வர தயக்கம் தெரிவிப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
இந்த வீடியோவை அவரது தாயார் படம் பிடித்துள்ளார் என தெரிகிறது. ஏனெனில் அந்த சிறுமி பேசியதை செல்போனில் படம் பிடித்தவரை ‘அம்மா’ என்று அவர் அழைக்கிறார். அந்த வீடியோவின் முடிவில் அதற்கு லைக் போடுமாறும், மறக்காமல் அடுத்தவர்களுக்கு பகிரும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 9-ஆம் தேதி ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 1.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்கு குவிந்துள்ளது.
அந்த சிறுமியின் வேண்டுகோள் நிறைவேற வேண்டுமென பலரும் தெரிவித்து வருகின்றனர்.