இந்தியா வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
உலகில் ஆளுமையும், அதிகாரமும் வாய்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின் இந்தியா வருவது இதுவே முதன்முறை. அமெரிக்காவிலிருந்து நேற்று காலை 11.37 மணிக்கு குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அவர் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அகமதாபாத்திலுள்ள மோதிரா மைதானத்திற்கு சென்ற ட்ரம்ப் அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். பின்னர் மாலையில் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தோடு சென்ற ட்ரம்ப் அதன் அழகை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இரண்டாவது நாளான இன்று, காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கிறார். அதனை தொடர்ந்து, 10.30 மணிக்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 11 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெறுகிறது.
பகல்12.40 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தும் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இரவு 7.30 மணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ட்ரம்ப் சந்திக்க உள்ளார். இரவு 10 மணிக்கு ட்ரம்ப் அமெரிக்கா புறப்படுகிறார்.