பயங்கரவாதத்துக்கு உதவுவது பாகிஸ்தானுக்கு எந்தவிதத்திலும் கைகொடுக்காது என்று கூறிய துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான வெங்கையா நாயுடு, 1971 ஆம் ஆண்டு போரில் நடந்தவற்றை மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூறும் நிகழ்வில் பேசிய வெங்கையா நாயுடு, பாகிஸ்தானில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அதனால் மற்ற நாடுகளிலும் அதே சூழல் நிலவ வேண்டும் என்று அந்நாடு நினைக்கிறது. ஆனால், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட ஒற்றுமையுடன் கைகோர்த்துள்ளனர் என்று பேசினார். மேலும், காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, வேறெந்த நாடும் காஷ்மீரில் இருந்து ஒருபிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் பேசினார்.
அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் இந்தியா, தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே உறுதிபூண்டுள்ளதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். கடந்த 1971-ல் நடந்த போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படைகளுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற நாடு உருவாக வழிவகுத்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்த வெங்கையா நாயுடு, பாஜக கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆகஸ்ட் 5-ல் நடைபெறும் தேர்தலை ஒட்டி, அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.