இந்தியா

மாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு

மாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு

webteam

ஒடிசாவில் மாணவர்களிடம் பேசக்கூடாது என பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

ஒடிசாவின் சம்பல்பூர் அருகே புர்லாவில் வீர் சுரேந்திர சாய் பல்கலைகழக டெக்னாலஜி என்ற கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் சிலர் தினந்தோறும் வீட்டிற்கு சென்று வருகின்றனர். பலர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரிக்கு சொந்தமாக 5 பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இதில் ’ரோகினி ஹால் ஆஃப் ரெசிடென்சி’ என்ற விடுதியும் ஒன்று. இங்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய நோட்டீஸ் அங்கு தங்கி பயிலும் மாணவிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதில், துணைவேந்தர் அறிவுரையின் படி, ரோகினி ஹால் ஆஃப் ரெசிடென்சி எல்லை கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரங்களில் மாணவிகள் யாரும் மாணவர்களுடன் நின்று பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி பி.சி.ஸ்வைனிடம் கேட்டபோது, நிர்வாகத்தின் அத்தகைய தகவல் உண்மை என தெரிவித்தார். மேலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.