லூதியானாவில் அறுவைசிகிச்சைமூலம் குழந்தை எடுத்தபோது மருத்துவர்கள் கர்ப்பப்பையில் டவலை வைத்து தைத்த அலட்சிய சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிசம்பர் 7-ம் ரவிந்தர் என்பவர் தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை சிவில் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சில டெஸ்டுகளை எடுத்தப்பிறகு, டிசம்பர் 8-ம் தேதி அறுவைசிகிச்சை செய்துள்ளனர். குழந்தை ஆரோக்யமாக பிறந்தும் தாய்க்கு வலி அதிகரித்திருக்கிறது. மேலும் அவரால் சிறுநீர்கூட கழிக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் வயிறு வீங்கிக்கொண்டே சென்றதை மருத்துவரிடமும் காட்டியிருக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த பெண்ணால் வலியை பொறுத்துக்கொள்ள இயலவில்லை. சிவில் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு கூறியிருக்கிறனர். ஆனால் டிசம்பர் 11-ம் தேதி ரவிந்தர் தனது மனைவியை சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் கர்ப்பப்பையில் டவல் இருப்பதை கண்டுபிடித்து வெளியே எடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவிந்தரும், குடும்பத்தாரும், சிவில் மருத்துவமனை முன்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டபிறகு, அலட்சியமாக நடந்துகொண்ட மருத்துவர்கள்மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், சற்று தாமதித்திருந்தால் தனது மனைவியின் உயிரே போயிருக்கும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் மருத்துவமனையில் இதுபோன்ற புகார்கள் வருவது முதன்முறையல்ல. இதற்குமுன்பே, 2019-ம் ஆண்டு மே மாதம், தாய்-சேய் பிரிவில் பி பாஸிட்டிவ் ரத்தம்கொண்ட ஒரு நோயாளிக்கு ஏ பாஸிட்டிவ் ரத்தத்தை ஏற்றிய அலட்சிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.