இந்தியா

குணமடைந்தோரிடம் மீதமிருக்கும் மருந்தை ஏழை, எளிய நோயாளிகளுக்கு அளிக்கும் மருத்துவ இணையர்

குணமடைந்தோரிடம் மீதமிருக்கும் மருந்தை ஏழை, எளிய நோயாளிகளுக்கு அளிக்கும் மருத்துவ இணையர்

நிவேதா ஜெகராஜா

மும்பையை சேர்ந்த ஒரு மருத்துவ இணையர், கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடம் மீதமிருக்கும் மருந்துகளை பெற்றுக்கொண்டு, அவற்றின் உடனடி தேவையிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அதை தானமாக வழங்கி வருகின்றனர்.

இந்த முயற்சியை, மருத்துவர் மார்கஸ் ரானே மற்றும் அவர் மனைவி மருத்துவர் ரெய்னா இணையர் கடந்த மே 1 ம் தேதி முதல் செய்துவருகின்றனர்.

இதுபற்றி இணையரில் ஒருவரான மருத்துவர் ரெய்னா கூறும்போது, "எங்களுடன் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டனர். மருந்துகளின் தட்டுப்பாடு, அதீத விலை காரணமாக அவர்களால் உரிய நேரத்தில் அம்மருந்துகளை பெற முடியவில்லை. அப்போது எனக்கு தெரிந்த கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவரிடம் விசாரித்த போது, அவருக்கு வாங்கப்பட்ட அதே மருந்து, மீதமிருப்பதாக கூறினார். உடனடியாக அதை வாங்கி, எங்களுடன் வேலைப்பார்த்தவரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு கொடுத்தோம். அப்போதுதான் இந்த ஐடியா தோன்றியது" எனக்கூறியுள்ளார்.

மேலும், “எங்களுடைய வீட்டின் அருகில் குடியிருக்கும் கட்டிடங்களில் வசிக்கும் 7 - 8 தன்னார்வலர்கள் உதவியுடன், இதை அனைவரும் சேர்ந்து செய்ய தொடங்கிவிட்டோம். மருந்து வாங்குவதற்கு நேரடியாக செல்ல முடியாமல் சிரமப்படும் நபர்களுக்கும் இவர்கள் உதவி வருகின்றோம். கடந்த வாரத்தில் மட்டும், ஏறத்தாழ 20 கிலோகிராம் உபயோகப்படுத்தப்படாத கொரோனா மருந்துகளை, குணமடைந்தோரிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கிறோம். கிடைத்த மருந்துகளை, ஆரம்ப சுகாதார மருந்துகளில் அளித்துவிட்டு, அதன்மூலம் ஏழை எளியோருக்கு இதை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து இவர்களுக்கு உதவிபுரிய முன்வந்தோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, அருகிலிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருக்கும் கட்டிடங்களிலுள்ள குடும்பத்தினர், அவர்கள் குணமானவுடன் மீதமிருக்கும் மருந்தை தருவதாக உறுதியளித்துள்ளனராம்.

குணமடைந்தோரிடமிருந்து பெறப்படும் மருந்துகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், ஸ்டீராய்டுகள், ஆன்டாசிட்ஸ், வைட்டமின் மாத்திரைகள் உட்பட பல மாத்திரைகள் கிடைப்பதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருசிலர் மருந்து மாத்திரைகள் மட்டுமன்றி, பல்ஸ் ஆக்சிமீட்டர் - தெர்மாமீட்டர் போன்றவற்றைகூட கொடுக்கின்றார்களாம்.

இவர்களின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.