இந்தியா

‘ஆப்ரேஷன் கமல்’ பற்றி உங்களுக்கு தெரியுமா..?

‘ஆப்ரேஷன் கமல்’ பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Rasus

கர்நாடகாவில் கடந்த 2008-ம் ஆண்டு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 7 பேரை பாஜக விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்தது. பாஜகவின் இந்த சூழ்ச்சியே ‘ஆப்ரேஷன் கமல்’ என்று அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே அதிக இடங்களை பெற்றுள்ள (104) பாஜகவால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக கடுமையான திட்டம் போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வாகியுள்ள குமாரசாமி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூபாய் 100 கோடி வரை செலவு செய்ய பாஜக தயாராக இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் பாஜகவின் முந்தைய சூழ்ச்சியாக விமர்சிக்கப்படும் ‘ஆப்ரேஷன் கமல்’ திட்டம் பற்றி தற்போதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எனவே ‘ஆப்ரேஷன் கமல்’ பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

கர்நாடகாவில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியைமக்க மொத்தமாக 113 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் பாஜக அதனை விட 3 இடங்களில் குறைவாக வெற்றி கண்டிருந்தது. இதனையடுத்து 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும் சுயேட்சைகள் ஒருவேளை வாபஸ் பெற்றால் ஆட்சி பறிபோய் விடுமே என பயந்த எடியூரப்பா அதற்கான சூழ்ச்சி திட்டத்தை முன்னெடுத்ததாக விமர்ச்சிக்கப்பட்டது.

நிலையான ஆட்சியை உருவாக்க நினைத்த எடியூரப்பா அதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மீண்டும் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஒரு தொகுதியில் மட்டும் எம்எல்ஏ மறைவால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதி கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால் 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்ததால் பாஜகவின் பலம் கூடியது. இதுவே ‘ஆப்ரேஷன் கமல்’ என்று விமர்சிக்கப்பட்டது. தற்போதும் இதுபோன்ற சூழ்ச்சியில் பாஜக ஈடுபடலாம் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.