திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வையங்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேவஸ்தான ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று திருப்பதி திருமலை நிர்வகிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்தத் கடிதத்தில் "கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். தரிசனம் நிறுத்தப்பட வேண்டும் ஏனென்றால் அது அத்தியாவசிய சேவை இல்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் "நாளுக்கு நாள் திருமலையில் கொரோனா பாதிக்கப்ப்டடோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. ஆனால் இதுவரை ஒரு பக்தர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தேவஸ்தானம் கூறுகிறது. ஆனால் தேவஸ்தான ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை மறந்துவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் தேவஸ்தான ஊழியர்களிடம் இருந்து கொரோனா தொற்று பக்தர்களுக்கு பரவும். மிகப் பெரிய இழப்பு ஏற்படுவதற்கு முன்பு உடனடி முடிவு எடுக்கப்பட வேண்டும்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து பேட்டியளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி "கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர், கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர காவலர்கள் . அதில், ஒரே ஒருவக்கு மட்டுமே தீவிரமான அறிகுறிகள் உள்ளது. கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை" என்றார்.
மேலும் " கோயிலை மூடுவதற்கு எந்தவொரு திட்டமுமில்லை. தொடர்ந்து, மூத்த அர்ச்சகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அர்ச்சர்களுக்கும், ஊழியர்களுக்கும் தனியாக தங்குமிடம் கோரியுள்ளனர். அவர்களுக்கான தனியான தங்குமிடமும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" என்றார் சுப்பாரெட்டி.