இந்தியா

நாப்கின்களுக்கு முதல் டிஜிட்டல் வங்கி!

நாப்கின்களுக்கு முதல் டிஜிட்டல் வங்கி!

webteam

சர்வதேச மாதவிடாய் சுகாதார நாளை முன்னிட்டு இந்தியாவில் முதன்முறையாக சானிட்டரி நாப்கின்களுக்கான டிஜிட்டல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இம்மாதம் 28-ஆம் தேதி சர்வதேச மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்பட்டது. பெண்களின், சிறுமிகளின் மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கமாகும். இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதன்முறையாக சானிட்டரி நாப்கினுக்கான டிஜிட்டல் வங்கி நேற்று மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ, பாரதி லவேகர் என்பவரால் தொடங்கப்பட்டுள்ள டிடிஇ பவுண்டேஷன் (TEE foundation) என்னும் தொண்டு நிறுவனம் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் வங்கி மூலம் சானிட்டரி நாப்கினை பெற விரும்புவோர் http://teefoundation.in/ எனும் இணையதளத்திற்கு சென்று தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் பெண்களின் தேவைக்கேற்ப கிராமப்புற - நகர்ப்புறங்களில் இருக்கும் அனைத்து வயது பெண்களுக்கும், அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கே சென்று இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாப்கின் வங்கி முயற்சி குறித்து பேசிய பாரதி லவேகர், ”பழங்குடி மற்றும் ஜில்லா பரிஷத் பள்ளிகளுக்கும் இந்த டிஜிட்டல் வங்கியின் சேவைகள் நீளும். ஏற்கனவே, இரண்டு மாத விடுமுறை நீங்கலாக, மத்திய அரசு பத்து மாதங்கள் வரை இந்த பள்ளிகளுக்கு நாப்கின்களை இலவசமாக வழங்கி வருகிறது. எனினும், கிராமத்தில் இருப்பவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்துகொண்டால், இரண்டு மாதங்களுக்கும் நேப்கின்களை அளிக்கிறோம்” என்று கூறினார்.

மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் நடிகை ஜீனத் அமான் ஆகியோர் டிஜிட்டல் நாப்கின் வங்கி துவக்க விழாவில் கலந்துகொண்டனர்