தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருந்து நடிகர் திலீப் 2 மணி நேரம் பரோலில் வெளியே வந்துள்ளார்.
மலையாள நடிகை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல கேரள நடிகர் திலீப்பை கடந்த ஜூலை மாதம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து பல்சர் சுனில், நடிகர் திலீப் உள்ளிட்டோரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திலீப்பின் மனைவியிடமும் பல்வேறு கட்ட விசாரணையை போலீஸார் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கேரளாவின் அங்கமாலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரின் அடுத்தடுத்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு திலீப் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க திலீப்பிற்கு 2 மணி நேர பரோல் வழங்கப்பட்டு, அவர் வெளியே வந்துள்ளார். சடங்கில் பங்கேற்ற பின் மீண்டும் திலீப் சிறையில் அடைக்கப்படுவார்.