பெங்களூரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. ஏழுமலையானின் பக்தரான இவருக்கு திருப்பதி மாவட்டம் டெக்கலி மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சாய்தாபுரம் மண்டலம் போத்திகுண்டா ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த 250 ஏக்கர் விவசாய நிலத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க நேற்று முன்வந்திருக்கிறார் அவர்.
இதையடுத்து நிலத்திற்கான ஆவணங்களை ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் சாய்தாபுரம், டெக்கலி ஆகிய பகுதிகளின் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து 250 ஏக்கர் விவசாய நிலத்தை தேவஸ்தானம் பெயருக்கு பத்திரப் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கும்படி ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
250 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ள பக்தர் முரளி கிருஷ்ணா, அந்த நிலத்தில் தேவஸ்தான பயன்பாட்டிற்குத் தேவையான தானியங்கள், மலர்கள் ஆகியவற்றை தானே பயிரிட்டு வழங்க முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.