பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான “புல்லட் ரயில்” திட்டத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தில் தொடங்கி வைத்தனர். இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரத்திலிருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் வரை செல்லும் எனவும், அதன் வேகம் 320 கிலோ மீட்டர் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தை சர்வதேச ஜப்பான் கூட்டுறவு நிறுவனம், இந்திய ரயில்வேத்துறை மற்றும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் எனவும், அதற்காக ரூ.1,06,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் நிதிஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் “புல்லட் ரயில்” திட்டம் ஓராண்டு காலதாமதத்திற்கு பிறகு தொடங்கப்பட்டது. இந்நிலையில் புல்லட் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. சதுப்பு நில காடுகள் பெருமளவில் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மகாராஷ்ட்ராவின் தானே ரயில் நிலையத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு காரணத்தையும் தேசிய அதி விரைவு ரயில் நிறுவன இயக்குனர் அச்சல் காரே தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருந்தால், 12 ஏக்கர் அளவுக்கு சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தற்போது மறுவடிவமைப்பிற்குப் பின்னர் அது 3 ஏக்கர் அளவிற்கு அது குறைக்கப்பட்டிருப்பதாக அச்சல் காரே கூறினார். மேலும் புல்லட் ரயில் நிலையத்திற்காக வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக ஐந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கான தொகையையும் தேசிய அதி விரைவு ரயில் நிறுவனம் வழங்கும் என்று அச்சல் காரே தெரிவித்துள்ளார்.