போலீஸ் ஸ்டேஷனுக்கு லீவு போட்டுவிட்டு கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவனாக செயல்பட்ட போலீஸ்காரரை தேடி வருகிறது ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம்.
கேரளாவில் ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து நடந்த கொள்ளைச் சம்பவங்களை அடுத்து அதுபற்றி விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ் (37) என்பவரை டெல்லியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இவர்களின் கொள்ளைக் கூட்டத்துக்கு அஸ்லுப் கான் என்பவர் தலைமை தாங்குவதாக தெரியவந்தது. இந்த கான் யாரென்று விசாரித்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கான், டெல்லி போலீஸ் கிரைம் பிராஞ்சில் பணியாற்றி காணாமல் போனவர். கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஸ்டேஷனில் ஒரு மாதம் லீவு போட்டுவிட்டு போனவர், பிறகு இன்னொரு மாதம் லீவு என்று சொன்னார். அதன்பின் அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இப்போது கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவனாக இருந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடக பகுதிகளிலும் இந்தக் கும்பல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஊருக்கு ஒதுக்குப் புறமாக எங்கெங்கு ஏடிஎம் இருக்கிறது என்பதை கவனித்துச் சொல்வதுதான் சுரேஷின் வேலை. பிறகு அவரது டீம், எங்கெங்கு சிசிடிவி கேமரா இருக்கிறது என்பதை செக் பண்ணும். பிறகு அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை ஆராய்ந்து கொள்ளையடிக்கும். கொள்ளையடிக்க போலி எண் கொண்ட காரில் செல்வார்கள். வேலை முடிந்ததும் எங்காவது காட்டுக்குள் வண்டியை நிறுத்தி ஹரியானா ரிஜிஸ்டிரேசன் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு வண்டியை கிளப்புவார்கள். வழியில் எங்காவது செக் போஸ்ட் இருந்தால், கான் தனது ஐடி கார்டை காண்பிப்பார். ஸ்பெஷல் விசாரணைக்காக வந்திருக்கிறோம் என கூசாமல் பொய் சொல்வார். இப்படியே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறது இந்த டீம். போலீசார் இப்போது அந்த கான்- ஐ தேடி வருகின்றனர்.