சி.பி.ஐ. அதிகாரியைபோல் நடித்து காரில் லிஃப்ட் கொடுத்து கொள்ளையடித்த நபர் போலீசில் சிக்கியுள்ளார்.
டெல்லி திரிலோக்புரியில் முகேஷ் என்பவர் சாலையில் தனியாக நின்று கொண்டிருப்பவர்கள் முன்னிலையில், தான் ஒரு சிபிஐ அதிகாரியைபோல் பாவனைகள் காட்டி நம்ப வைப்பார். சில நேரங்களில் வயர்லெஸ் செட்களில் பேசி தனது இலக்குகளுக்கு முன்னர் சிபிஐ அல்லது குற்றப்பிரிவு அதிகாரியாக பக்காவாக நடித்துள்ளார்.
பின்னர் அங்கு நிற்பவரிடம் நைசாகப் பேசி அவர்கள் போக வேண்டிய இடத்தை தெரிந்துகொண்டு, அந்த பகுதி வழியாகவே தான் செல்லவிருப்பதாகவும், சிறிது நேரத்தில் தனது கார் வந்துவிடும் என்றும் அங்கே தங்களை இறக்கிவிட்டு செல்வதாகவும் கூறுவார்.
பின்னர் முகேஷ் கூறியபடியே அவரது கார் வரும். காரில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் ஒரு நபர் போனில் வழக்குகளை விசாரிப்பதுபோல் தன் பங்குக்கு பாவனைகள் காட்டுவார். இதனை வைத்து சிபிஐ அதிகாரி என உறுதியாக நம்பும் அவர்கள் காரில் ஏறி அமர்வர்.
பின்னர் காரை ஒரு மறைவான இடத்திற்கு ஓட்டிச்சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பணம், ஏடிஎம் கார்டுகளை பிடுங்கிக்கொண்டு அவர்களை இறக்கிவிட்டுச் செல்வர்.
இந்த உத்தியைக் கையாண்டு டெல்லியில் முகேஷ் பலரிடமும் கொள்ளையடித்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. கடந்த ஜூன் 30 ம் தேதி, ஒருவர் வடக்கு டெல்லியில் புராரிக்குச் செல்லும்போது 1,70,000 ரூபாயை இந்த கும்பலிடம் பறிகொடுத்துள்ளார்.
இதையடுத்து முகேஷை போலீசார் தேடிவந்த வந்த நிலையில் திரிலோக்புரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். முகேஷ் மீது கொள்ளை, கடத்தல், திருட்டு மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் முகேஷின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.