இந்தியா

''இது போராட்டம் தான், போர் கிடையாது; வன்முறை கூடாது'' - விவசாய சங்கங்கள்

''இது போராட்டம் தான், போர் கிடையாது; வன்முறை கூடாது'' - விவசாய சங்கங்கள்

webteam

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 67 ஆவது நாளாக நீடிக்கிறது. இது போராட்டம் தானே தவிர, போர் கிடையாது, யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று கூறி விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை உறுதியுடன் தொடர்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு மேலாக மிக அமைதியான முறையில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்திற்கு கரும்புள்ளியாக அமைந்தது ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் ஏற்பட்ட வன்முறை. விவசாயிகள் காவல்துறையினர் என இரண்டு தரப்பிலுமே கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையில் வன்முறையை தடுக்கத் தவறிய இடங்களை சரிசெய்யும் வேலைகளை டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநில காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

சாலைகளில் கனமான தடுப்புகளை வைத்தும், அத்துமீறலை தடுக்க தடுப்புகளில் முள்கம்பி சுற்றியும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இணையதள சேவை துண்டிப்பு ஜனவரி 31 ஆம்தேதி இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க வன்முறையால் ஏற்பட்ட மனக் கசப்புகளை போக்கும் வேலைகளில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.போராட்டக்களங்களில் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பேசுவோர் எந்த காரணத்தைக்கொண்டும் வன்முறையை தூண்டக்கூடாது, இது போராட்டம்தானே தவிர, போர் கிடையாது, கண்ணியம் காக்க வேண்டும் என்று மூத்த விவசாயிகள் வலியுறுத்திவருகிறார்கள்.

வெளியாட்கள் யாரும் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும் வேலைகளிலும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே டெல்லி செங்கோட்டையில் புகுந்து கொடியேற்றியவர்கள் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. செங்கோட்டை பகுதிகளில் தடயங்களை சேகரிக்கும் பணியில் தடயஅறிவியல் துறையினர் ஈடுபட்டனர்.