இந்தியா

மீண்டும் அரியணை ஏறுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

மீண்டும் அரியணை ஏறுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

rajakannan

ஐஐடியில் படித்து வருமான வரித் துறை அதிகாரி ஆக இருந்த கெஜ்ரிவால் பின்னர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார். 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பிடித்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல் முறையாக முதலமைச்சரானார் கெஜ்ரிவால். ஆனால் அவரது ஆட்சி 45 நாட்கள் மட்டுமே நீடித்தது. லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாததை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்.

2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியிடம் கெஜ்ரிவால் தோற்றார். ஆனால் 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி அதிசயக்கத்தக்க வெற்றியுடன் அரியணை ஏறியது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 54% வாக்குகளை அக்கட்சி அள்ளியது. தேசிய அரசியல் அரங்கில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது. எனினும், டெல்லியில் முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கு‌ம் நடந்த அதிகார மோதலே கடந்த ஐந்தாண்டுகளில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது.

இந்த அதிகாரப் போட்டி சட்டப்போராட்டமாக மாறி உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில் முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் அறிவுரைப்படியே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் மீண்டும் ஒரு பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளார் கெஜ்ரிவால். இத்தேர்தலில் தங்கள் ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களையும் ஊழல் இன்மையையுமே பிரதான ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் கெஜ்ரிவால்.

அரசு பள்ளிகளில் கூடுதலாக 20 ஆயிரம் வகுப்பறைகள், மின் கட்டண சலுகை, குடிநீர் கட்டண சலுகை, ஏழைகளுக்கான மருத்துவ மையங்கள் என தங்கள் சாதனைகளை அடுக்குகிறது ஆம்ஆத்மி அரசு. எனினும் 2019 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தோற்றது கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தலைநகர் டெல்லியில் 2வது முறையாக‌ ஆட்சியமைத்து விட வேண்டும் என பாஜக பாய்ச்சல் காட்டி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியும் மோடி ஆட்சியின் சாதனைகளையும் கெஜ்ரிவால் அரசின் குறைகளையும் சுட்டிக்காட்டி களமிறங்கியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை குறைந்து வருவது அதன் செயல்பாடுகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதனால் தலைநகரத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் அக்கட்சி தலைமை உள்ளது. கடுங்குளிருக்கு இடையில் அனல் பறக்க நடக்கும் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரிவரி 11ஆம்தேதி தெரிந்துவிடும்