இந்தியா

டெல்லியில் காற்று மாசால் அதிகரித்த ‘மாஸ்க்’ விற்பனை

டெல்லியில் காற்று மாசால் அதிகரித்த ‘மாஸ்க்’ விற்பனை

webteam

டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் புகைமாசால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சுற்றுலாவுக்காக அங்கு சென்றவர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

டெல்லியில் காற்றில் மாசின் அளவு கடுமையான அளவு அதிகரித்ததால் பனியும், புகையும் சேர்ந்த பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பனியும், புகையும் சேர்ந்த பனிப்புகை மூட்டம் நிலவி வருவதால் வாகனங்கள் வரிசையாக மோதி விபத்துகள் ஏற்பட்டது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க டெல்லிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் காற்று மாசு விட்டுவைக்கவில்லை. கடுமையான காற்று மாசு, பனிப்புகை மூட்டம் போன்றவற்றால் அவர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

முகக் கவசங்களை வாங்கி அணிந்தும், கர்சீஃப் மற்றும் துப்பட்டாவினால் மூடியும் காற்று மாசில் இருந்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்தும் தங்களை தற்காத்து கொள்கின்றனர். இதனால் டெல்லியில் முகக் கவசங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இனி வரும் மாதங்களில் குளிர் அதிகரிக்கும்போது காற்றின் மாசும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நிரந்த தீர்வு கண்டு நாட்டின் தலைநகரின் சிறப்பை தலைநிமிரச் செய்ய வேண்டும் என்பதே டெல்லி மக்களின் கோரிக்கையாக உள்ளது.