இந்தியா

டெல்லி: தொடர்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்.. நோயாளிகள் அவதி

டெல்லி: தொடர்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்.. நோயாளிகள் அவதி

நிவேதா ஜெகராஜா

செவிலியர் சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்திவருகின்றனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என செவிலியர் சங்க பொதுச்செயலாளர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்ளூர் மக்களை தவிர்த்து அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்காக டெல்லிக்கே வருகின்றனர். இந்த நிலையில் செவிலியர் சங்கத் தலைவர் ஹரிஷ் கஜ்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான நோயாளிகள் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பமீர் கூறுகையில், “முதலில் எங்களது போராட்டம் காரணமாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். வேறு வழியின்றி தான் வேலை நிறுத்த போராட்டத்தை முன் எடுத்து உள்ளோம். கடந்த வெள்ளிக்கிழமை முதலே நாங்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்காக எங்கள் அனைவருக்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பபட்டது.

ஆனால் அதறக்குள் திடீரென எங்கள் சங்கத்தின் தலைவர் ஹரிஷ் கஜ்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணியிடை நீக்கத்தை உடனடியாக திரும்பி பெற வேண்டும். மேலும் எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

- விக்னேஷ் முத்து