இந்தியா

முப்படைகளும் அடங்கிய தனிப்படை அமைக்க பரிசீலனை: ராஜ்நாத் சிங்

முப்படைகளும் அடங்கிய தனிப்படை அமைக்க பரிசீலனை: ராஜ்நாத் சிங்

JustinDurai
முப்படைகளும் அடங்கிய ஒருங்கிணைந்த படைப்பிரிவை உருவாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அங்கு உரையாற்றிய அவர், நமது அண்டை நாடு ஒன்று, இரண்டு போர்களில் தோற்ற நிலையில், மறைமுகமான யுத்தத்தை தொடுத்து வருவதாக பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டினார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டிலேயே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்த இந்தியா தயங்காது எனவும் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியாவுக்கு சவால் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக அவசரகாலத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் முப்படையினரும் அடங்கிய தனிப்படையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.