ஒடிஷா புவனேஷ்வரில் உள்ள ‘கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)’ என்ற கல்லூரியின் ஹாஸ்டல் உணவில் இறந்த தவளை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இச்சம்பவத்தை 'X'(முன்னர் டிவிட்டர்) தளத்தில் ஆரேன்ஷ் என்பவர் உணவில் இறந்த தவளை கிடந்த புகைப்படத்தோடு சம்பவத்தை விளக்கியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் நிறைய கவனத்தை பெற்றுள்ளது. அவர் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், “இது KIIT புவனேஸ்வர், இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 42 வது இடத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பொறியியல் பட்டம் பெற சுமார் 17.5 லட்சத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அங்கு வழங்கப்படும் கல்லூரி விடுதியின் உணவு இதுதான்” என குறிப்பிட்டிருக்கும் அவர், “இப்படியெல்லாம் இருக்கும் போது தான் ஏன் பல மாணவர்கள் சிறந்த கல்விக்காகவும், வசதிகளுக்காகவும் இந்தியாவை விட்டு பிற நாடுகளுக்கு செல்கிறார்கள் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்” என்றும் எழுதியுள்ளார்.
கிட்டத்தட்ட 4 லட்சம் பயனர்கள் இந்த பதிவை பார்த்திருக்கும் நிலையில், அவர் சில மணி நேரம் கழித்து மற்றொரு அதிர்ச்சிகரமான பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தவளை இறந்த விவகாரத்தில் கல்லூரி எடுத்த நடவடிக்கை குறித்த ஆதாரத்தை பகிர்ந்துள்ளார்.
செப்டம்பர் 23 தேதியிட்டு மெஸ் ஒப்பந்ததாரருக்கு கல்லூரி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், “நீங்கள் தயாரித்த உணவு "முற்றிலும் சுகாதாரமற்றது". உங்களுடைய மதிய உணவில் மாணவர்கள் "அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே (காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் இரவு உணவு) உணவுப் பொருட்களுக்கான ஒரு நாள் கட்டணம் தண்டனையின் அடையாளமாக கழிக்கப்படுகிறது. ஏனெனில் இது தங்கும் நபர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைப் பற்றியது. மேலும், நீங்கள் தயாரிக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை பகிர்ந்து பதிவிட்டிருக்கும் பதிவில், “இது தான் ஒரு மனித உயிருக்கான மதிப்பு. புவனேஸ்வர் பல்கலைக் கழகத்தில் தவளை பரிமாறப்பட்ட மாணவர் விடுதியில், குற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மெஸ் வழங்குநர் நிறுவனத்திடம் இருந்து ஒரு நாள் கட்டணத்தை மட்டும் கழிக்க முடிவு செய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் கல்லூரியை விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து கமண்ட் செய்திருக்கும் பயனர் ஒருவர், "எனது ஹாஸ்டல் உணவில் பிளேடு கிடந்ததை இது நினைவூட்டுகிறது" என்றும், மற்றொருவர் "அபாயகரமானது. நிறுவனம், கேண்டீன் ஒப்பந்ததாரர், பொறுப்பாளர் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும் மற்றும் அவர்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் "ஒருமுறை எங்கள் ஹாஸ்டல் மெஸ் உணவில் பல்லி கிடைத்தது. அதன்பிறகு செமஸ்டர் முழுவதும் என்னால் மெஸ்ஸில் சாப்பிட முடியவில்லை" என்றும், இன்னொருவர் "எங்கள் உணவில் சில பூச்சிகள் கிடைத்த அந்த நேரத்தை இது எனக்கு நினைவூட்டுகிறது. கொட்டிவிட்டு வாங்கிய ஒவ்வொரு தட்டிலும் பூச்சி கிடைத்தது” என்று தங்களுடைய மோசமான அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர்.