ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற்றது தொடர்பாக பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
ரஃபேல் விமான ஊழல் விவகாரத்தில் முக்கிய சர்ச்சையாக இருப்பது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்களை வழங்க உள்ள டசால்ட்ஸ் நிறுவனத்தின் இந்திய பங்குதாரராக தேர்வானதுதான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடெட். இந்த நிறுவனம் மூலமே இந்தியாவில் ரஃபேல் தொடர்பான வியாபரத்தை டசால்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் டசால்ட்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்பங்களை பெற்று ரஃபேல் விமானங்களை இந்தியாவில் உருவாக்கும் பணி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்திடம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2015-ல் அறிவிக்கப்பட்ட முடிவில் HAL நிறுவனம் நிரகாரிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு படையில் உள்ள பல்வேறு விமானங்களை தயாரித்து வரும் ஒரு அரசு நிறுவனம். கடந்த 60 வருடங்கள் அனுபவம் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, இந்த துறையில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என்பதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் கேள்வி.
ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்து இருந்தார். ஹாலண்டேவின் கருத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதனால், அனில் அம்பானிக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை பாஜக தலைமையிலான மத்திய அரசு மறுத்தது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய பங்குதாரராக சேர்க்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான ‘Mediapart’ பத்திரிக்கை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியா பார்ட் கூறியுள்ளது.
ஏற்கனவே, ரஃபேல் விவகாரம் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், தற்போது பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தகவல் என்.டி.டி.வி