இந்தியா

பட்டியலின பெண் தண்ணீர் குடித்ததால் பசுவின் கோமியத்தை கொண்டு டேங்கை சுத்தப்படுத்திய மக்கள்

பட்டியலின பெண் தண்ணீர் குடித்ததால் பசுவின் கோமியத்தை கொண்டு டேங்கை சுத்தப்படுத்திய மக்கள்

JustinDurai

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குழாயில் தண்ணீர் குடித்ததால் கிராம மக்கள் அந்த  தண்ணீர் தொட்டியை காலி செய்து பசுவின் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சாமராஜ் நகர் தாலுக்காவில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக உறவினர்கள், ஊர் மக்கள் வந்து சென்றனர். அப்போது ஒரு பட்டியலின பெண், லிங்காயத்கள் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் தாகத்தில் தண்ணீர் குடித்துள்ளார். அவர் பட்டியலினப் பெண் என்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சிலர் அவரை திட்டினர். அதன்பின் குழாய்களை திறந்துவிட்டு தண்ணீரை முழுதும் காலி செய்ததுடன், பசு கோமியத்தை தெளித்து சுத்தம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. பெண்ணிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று ஹெக்கோதாரா  கிராமத்துக்கு வருவாய்த்துறையினர், சமூக நலத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பட்டியலின பெண் குழாயில் தண்ணீர் குடித்து விட்டார் என்பதற்காக அந்த  தண்ணீர் தொட்டியை காலி செய்து சுத்தம் செய்த சம்பவம் உண்மைதான் என்பதை உறுதி செய்தனர் .  

இதையடுத்து சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் தொட்டியின் மீது 'அனைத்து மக்களும் இதை தண்ணீரை உபயோகப்படுத்தலாம்' என எழுதி வைத்து இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

இதையும் படிக்கலாமே: சாதி ,மொழி, வரலாறு மூலம் நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிகள் நடக்கிறது - பிரதமர் மோடி