இந்தியா

இன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..!

இன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..!

Rasus

ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் பெயிட்டி புயல் இன்று கரையை கடக்கிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 1.30 நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் பெயிட்டி புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. பெயிட்டி புயல் தீவிரப் புயலாக மாறியுள்ள நிலையில், இன்று பிற்பகல் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்‌கப்பட்டுள்ளது.

பெயிட்டி பு‌யல் கா‌ரணமா‌க தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை எ‌ன சென்னை வானிலை ஆய்வு‌ மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வரையும், சில நேரம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ட்டி புயல் காரணமாக தமிழகத்தின்‌‌ வட கடலோரப் பகுதிகளில் ‌கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கொகிலமேடு, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பத்திரப்படுத்தியுள்ள மீனவர்கள் வாழ்வாதரமின்றி தவித்து வரும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எண்ணூர் நெட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய பகுதிகளிலும், திருவொற்றியூரில் ஒன்டிகுப்பம், கேவிகே குப்பம், காசிமேடு ஆகிய பகுதிகளிலும் மணிக்கு 40 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசியது. இப்பகுதிகளில் கடற்கரை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கற்களை தாண்டி கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.