இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி பெண் நீதிபதி வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் அவதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி பெண் நீதிபதி வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் அவதி!

JustinDurai

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த நீதிபதிக்கு செயற்கை சுவாச சிகிச்சை வசதி கிடைக்கப் பெறவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

டெல்லியில் தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வரும் நுபுர் குப்தா என்ற பெண் நீதிபதிக்கு, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 32 வயதான அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை உதவி தேவைப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு அந்த சிகிச்சை பெறுவதற்கு வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் "டெல்லி கொரோனா' செயலியின் தகவலின்படி, டெல்லியில் புதன்கிழமை மாலை 4.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 1,657 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 5 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மட்டுமே இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. டெல்லியில் தினசரி 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் 300-ஐ தாண்டியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி டெல்லியில் 98,264 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.