செய்தியாளர்கள்: ரகுமான், ராஜ்குமார்
புதுச்சேரி கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் சுகாதாரமற்ற முறையிலும், அதிக வர்ணத்துடன் பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், அரசு செவிலியர் கல்லூரி அருகே பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவர் விற்பனைக்கு வைத்திருந்த பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து அதை ஆய்வகத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர்.
அப்போது அதில், அரசால் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோடமின் - பி என்ற ரசாயனப் பொருளைக் கொண்டு தயாரித்திருப்பது தெரியவந்ததுள்ளது.
இது குறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் கூறியதாவது,
”இது போன்ற தடைசெய்யப்பட்ட ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாயை குழந்தைகள் உண்ணுவதால் அவர்களுக்கு கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பிடிபட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வடமாநில இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்த பஞ்சு மிட்டாய்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் உதவியோடு அவர்களை அழைத்து வர்ணம் அதிகம் தெரிய வேண்டும் என்பதற்காக இது போன்ற தடைசெய்யப்பட்ட ரசாயானப் பொருட்களை கொண்டு பஞ்சு மிட்டாய்களை தயாரிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளோம்.
அதேபோல் அவர்கள், உரிமம் பெற்றுதான் பஞ்சு மிட்டாய்களை தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பிடிபட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், சுற்றுலா தலங்களில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் ஆய்வு செய்யப்படும் என்றும், துரித உணவுகளில் அதிகளவு வர்ணம் சேர்க்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளதாக ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்வதை கண்காணிக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் தலைமையில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுளளது. ”ஏற்கனவே தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதேபோல் வட மாநிலத்தவர்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க இருக்கிறோம்
ரசாயனம் கலந்து விற்பனை செய்பவர்கள் மீது அபராதமும், நீதிமன்றம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும். பொதுவாக உணவு வகைகளில் நிறமூட்டுவதை கைவிட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.