இந்தியா

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்ராவில் ஊழல் : 4 அறங்காவலர்கள் பதவி விலகல்

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்ராவில் ஊழல் : 4 அறங்காவலர்கள் பதவி விலகல்

EllusamyKarthik

இந்தியாவில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் பணியை கவனித்து வருகிறது தனியார் அமைப்பான அட்சய பாத்ரா அறக்கட்டளை. கடந்த 2000மாவது ஆண்டு முதல் அரசு - தனியார் கூட்டு முயற்சியில் இந்த பணியை அந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. 

இதன் மூலம் தினந்தோறும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், அட்சய பாத்ராவில் ஆரம்பம் முதலே அறங்காவல் குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த முன்னாள் இன்ஃபோசிஸ் இயக்குநர் மோகன்தாஸ் பய், அபய் ஜெயின், பால கிருஷ்ணன், ராஜ் கொண்டூர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். 

அறக்கட்டளையில் நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தணிக்கைக் குழுவின் விவகாரங்களில் தலைவர் மது பண்டிட் தாசா மற்றும் குழுவினர் தலையிடுவதால் வெளிப்படைத்தன்மையை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி நான்கு பெரும் பதவி விலகியுள்ளனர்.

“நன்கொடைகளை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் அட்சய பாத்ராவின் ஊழியர்கள் அல்ல. அதனால் அவர்களை தலைமை நிர்வாக அதிகாரியின் ஒழுங்கு நடவடிக்கைகளின் கீழ் கொண்டு வரவில்லை. அவர்களே தான் அட்சய பத்ராவுக்கும் நிதி திரட்டி வருகிறார்கள். அப்படி பெறப்படும்  நிதி வேறொரு அறக்கட்டளைக்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. அதனால் வெளிப்படையான நிர்வாகத்தை நாங்கள் வலியுறுத்தினோம். அதையடுத்து அறங்காவலர்களுக்கும், தலைவருக்கும் இடையே முரண் ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார் மோகன்தாஸ் பய். 

இதனால் அட்சய பாத்ராவின் எதிர்கால செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. 

நன்றி : The New Minute