இந்தியா

சபரிமலையில் தற்காலிக பணியாளர் இருவருக்கு கொரோனா: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு

சபரிமலையில் தற்காலிக பணியாளர் இருவருக்கு கொரோனா: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு

kaleelrahman

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்காலிக பணியாளர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபரிமலை சன்னிதானத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தங்கி இருந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பலரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில் அவரிடம் தங்கி இருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவருடன் தங்கி இருந்த நபர்களையும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் சிறப்பு அதிகாரி அருண் கே.விஜயன் தலைமையிலான காவல்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை என அனைத்து துறைகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்தில் சபரிமலை சன்னிதானத்தில் பணியாற்ற வரும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கு கடைகள் நடத்துபவர்கள், அதில் பணியாற்றுபவர்கள் என அனைவரும் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதேபோல அங்குள்ள கடைகளில் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். மேலும் பதினெட்டாம் படி ஏறும் நடைப்பந்தலில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் அதிகமாக காணப்படும் காட்டு பன்றிகளை அப்புறப்படுத்த வனத்துறையும் முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாக உயர் அதிகாரி அருண் கே.விஜயன் கூறினார்.