மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் வன்முறை நீடித்து வரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. மணிப்பூர் கலவரம் உயிர்ப்புடன் இருப்பதற்கும் அதன் தாக்கமும் உயிர்ப்பலிகளும் அதிகளவில் இருப்பதற்கும் மிக முக்கிய காரணம், வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆயுதங்களை கொள்ளை அடிப்பது தான் என்றும் கலவரத்தின் போது ஆயுதங்களை உபயோகிப்பது தான் என்றும் கூறப்படுகிறது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து பேசினர்.
இந்நிலையில், மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட புதிய வன்முறையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தவாய் குகி கிராமத்தில் அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக உக்ருல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாகா சமூகத்தினர் அதிகளவில் உள்ள உக்ருல் மாவட்டத்திற்கும், மெய்தி சமூகத்தினர் அதிகளவில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்திற்கும் இடையே இந்த கிராமம் அமைந்துள்ளது.
காவல்துறையினர், இந்த புதிய வன்முறையில் இறந்தவர்கள் கிராமத்தில் இருந்த தன்னார்வலர்கள் என்கின்றனர். சம்பவத்தின்போது, பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து ஆயுதமேந்திய கும்பல் ஒன்று மலைகளுக்குள் ஊடுருவி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் குக்கி இளைஞர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது வரை மணிப்பூரில் நடந்து வரும் இன மோதலில் ஏறத்தாழ 190 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில் கூட, மணிப்பூர் வன்முறை அலைகளைக் கண்டாலும், கடந்த சில நாட்களாக அமைதி நிலவுவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.