இந்தியா

"கோழி விற்பனைக்கு தடை வேண்டாம்" மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

"கோழி விற்பனைக்கு தடை வேண்டாம்" மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

JustinDurai

நன்றாக சமைக்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை மக்கள் உட்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பறவை காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் கோழி சந்தைகளை மூடவோ விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவோ தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 15-ம் தேதி நிலவரப்படி மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கோழி, வாத்து, காகம் உள்ளிட்ட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் எனப்படும் அவியன் இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இது பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க திறம்பட செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அவியன் இன்ஃபுளுயன்சா 70 டிகிரி வெப்பநிலையில் அழிந்து விடும் என்றும், நன்றாக சமைக்கப்பட்ட நிலையில் இறைச்சி, முட்டைகளை மக்கள் உட்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் பீதியைப் போக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.