காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ்-அப்பிற்கும் ‘பெகசஸ்’ மால்வேர் வந்திருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றச்சாட்டியுள்ளார்.
இந்தியர்களின் வாட்ஸ் அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருவதாகவும் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியிருந்தார். தனி நபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில், அதை மீறும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை குறி வைத்து, அவர்களின் வாட்ஸ் அப் மூலம் உளவுப்பார்க்கப்பட்ட தகவல் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1,400 மொபைல் போன்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், ‘பெகசஸ்’ என்ற மால்வேர் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலர், தங்களுக்கு வாட்ஸ் அப்பில் வந்த மர்ம அழைப்புகள் குறித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில், பிரியங்கா காந்திக்கும் வாட்ஸ் அப்பில் ‘பெகசஸ்’ மால்வேர் மூலம் மர்ம அழைப்புகள் வந்ததாக ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியிருக்கிறார். அத்துடன், சட்டத்திற்கும் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான இந்த ஹேக்கிங்களை பாஜக தான் செய்துவருவதாகவும், நாளுக்குள் நாள் இந்த உண்மைகள் வெளிவந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த சட்டவிரோத மோசடியை நிறைவேற்றுவதும் பாஜக அரசு தான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.