இந்தியா

குஜராத்தில் அதிகளவில் சிக்கும் போதைப்பொருட்கள்! மோடி மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி

குஜராத்தில் அதிகளவில் சிக்கும் போதைப்பொருட்கள்! மோடி மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி

webteam

குஜராத்தில் தொடர்ந்து போதைப்பொருட்கள் அதிகளவில் சிக்கி வரும் நிலையில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்திற்குள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள் ஊடுருவி வருவதாகவும் காந்தியும் பட்டேலும் பிறந்த புனித பூமியில் யார் இந்த செயலை செய்வது என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தில் இயங்கி வரும் போதை சாம்ராஜ்ய கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் அரசு அமைப்புகளும் கைது செய்யாதது ஏன் எனவும் அவர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “குஜராத்தில் 'எளிதாக போதைப்பொருள் வியாபாரம்'? ஐயா, இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

1. ஆயிரக்கணக்கான கோடி போதைப் பொருட்கள் குஜராத்தை அடைகின்றன, காந்தி-படேலின் புண்ணிய பூமியில் இந்த விஷத்தைப் பரப்புவது யார்?

2. பலமுறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும், துறைமுக உரிமையாளரிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

3. NCB மற்றும் பிற அரசு நிறுவனங்களால் இதுவரை குஜராத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை ஏன் பிடிக்க முடியவில்லை?

4. மாஃபியா 'நண்பர்களுக்கு' பாதுகாப்பு அளிக்கும் மத்திய மற்றும் குஜராத் அரசில் அமர்ந்திருப்பவர்கள் யார்?

பிரதமரே, எவ்வளவு காலம் மௌனம் காக்கப் போகிறீர்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்திற்குள் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் வந்துள்ளதாகவும் இதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் வலியுறுத்தியுள்ளார்.