கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் டெல்லியில் சித்தராமையா முகாமிட்டுள்ளார். அதை வேளையில் டி.கே. சிவகுமார் கர்நாடகாவில் இருந்து இன்று டெல்லி செல்வாரென தெரிகிறது.
கட்சியில் செல்வாக்கு மிகுந்த மூத்த தலைவர்களான சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் இடையே முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் இருந்து வரும் நிலையில், யாருக்கு முதல்வர் பதவியை வழங்குவது என கட்சியின் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் இருவருக்கும் உள்ள செல்வாக்கு, அவர்கள் மத்தியிலான ஆலோசனைகள் மற்றும் அவர்களின் கருத்துக்களை ரகசிய முறையில்பதிவு செய்வது போன்றவற்றை மேற்கொள்ளவும், இறுதியில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் மேலிட மேற்பார்வையாளர்கள் குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்தது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் பெங்களூரில் எம்எல்ஏக்களிடம் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட மேலிட மேற்பார்வையாளர்கள் குழு, நேற்றைய தினம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அதை நேரில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசிப்பார் என்றும், பின் முதல்வர் யார் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும் என்றும் காங்கிரஸ் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற சூழலில் நேற்று டெல்லி சென்ற சித்தராமையா கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. இந்நிலையில் டி கே சிவகுமார், இன்று பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தான் டெல்லி செல்லப் போவதில்லை - செல்வேன் - பயணம் ரத்து என பல கருத்துகளை கூறிவந்தார் டி.கே.சிவகுமார். இந்நிலையில் இறுதியாக இன்று செய்தியாளர்களை சந்தித்து, “கட்சி தலைமை என்னை அழைத்திருக்கிறது. ஆகவே இன்று டெல்லி செல்ல உள்ளேன்” என தெரிவித்தார்.
டெல்லி நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் சித்தராமையா, இன்று மல்லிகார்ஜுன கார்கேவை தனியாக சந்திப்பாரா அல்லது டி.கே.சிவகுமார் டெல்லி சென்ற பின்பு இருவரும் கூட்டாக மல்லிகார்ஜுன கார்வை சந்தித்து பேசுவார்களா என பொருத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடக முதல்வர் யார் என்று காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவுக்குள்ளோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் மே 18 ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.