எல்லோருடைய கண்ணீரும் ஒன்றுதான், ஏழைப் பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல் நீதி வழங்கப்பட வேண்டும் என இன்று பணிஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பணி ஓய்வு பெற்ற தீபக் மிஸ்ராவுக்கு பிரிவு உபச்சார விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய அவர், ''இந்திய நீதித்துறை உலகிலேயே மிகவும் வலிமையானது. லட்சக்கணக்கான வழக்குகளை கையாளும் திறன், இந்திய நீதித்துறைக்கு உள்ளது. நீதித்துறையை மேம்படுத்தும் சக்தி இளம் வழக்கறிஞர்களுக்கு இருக்கிறது. மக்களின் வரலாற்றை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கினேன்'' என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பேசிய மூத்த நீதிபதியும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளவருமான ரஞ்சன் கோகாய், தீபக் மிஸ்ரா வழங்கிய முக்கியமான தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார்.
விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தீபக் மிஸ்ரா இடம் பெற்றிருந்த 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, சுதந்திரமாக வாழ வழிவகுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு வித்திடும் தீர்ப்பை கூறியது. தனிப்பட்டவரின் சுதந்திரம், உரிமை ஆகியவற்றை உறுதி செய்வதில் அவர் எப்போதும் திடமாக இருந்தார்'' என்று தெரிவித்தார்
பின்னர் பேசிய தீபக் மிஸ்ரா, ''வழக்குகளில் அதிகாரமிக்கவர்கள் அல்லது சாமானியர்கள் என்று பார்க்காமல் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். அவர்கள் இருவரும் நீதியின் முன் சமமானவர்களே. ஏழையின் கண்ணீரும், செல்வந்தரின் கண்ணீரும் சமமானவைதான். எல்லோருடைய கண்ணீரும் ஒன்றுதான்'' என்று தெரிவித்தார்