நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான கேரள பெண்ணின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இந்தியர்கள் ஐந்து பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களின் பெயரை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. பலியான இந்தியர்கள், மெகபூப் கோகார், ரமீஸ் வோரா, ஆசிப் வோரா (மூவரும் குஜராத்தைச் சேர்ந்தவர் கள்), ஓஸைர் காதிர் (ஐதராபாத்), அன்சி அலிபாவா (கேரளா).
படுகாயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிறைஸ்ட்சர்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு துரிதமாக விசா வழங்குவதற்காக பிரத்யேக இணையதளத்தை நியூசிலாந்து அரசு உருவாக்கியுள்ளது. அதேபோல், உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான அன்சி அலிபாவா (23), கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரைச் சேர்ந்தவர். தனது கணவர் அப்துல் நாசருடன் நியூசிலாந்தில் வசித்து வந்தார். கடந்த வருடம்தான் அன்சி, அங்கு சென்றுள்ளார். அங்குள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று தனது கணவருடன் மசூதிக்கு சென்றார்.
பெண்கள் பகுதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கணவன் கண்முன்பே ரத்த வெள்ளத்தில் சாய்ந் திருக்கிறார் அன்சி. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்துல் நாசர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் .
(கேரளாவில் அன்சியின் வீட்டில்...)
இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரில் சோகம் சூழ்ந்துள்ளது. அவர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கேரள முதல மைச்சர் பினராயி விஜயன், அன்சியின் உடலை கேரளா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.