இந்தியா

“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..!

“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..!

webteam

மக்கள் நீரை சேமித்து வைக்காவிட்டால் விரைவில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் கேப்டவுன் நகரை போல தண்ணீர் பிரச்னையை சந்திக்க நேரிடும் என்று ஜல்சகதி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். 

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நீர் சேமிப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் தண்ணீர் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வசதி இல்லை. ஏனென்றால் இந்திய சுதந்திரம் அடைந்தபோது  தனிநபருக்கான தண்ணீர் அளவு 5000 கியூபிக் மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது அது 1540 கியூபிக் மீட்டராக குறைந்துள்ளது. இதேபோன்று தண்ணீர் அளவு குறைந்து கொண்டே போனால், மக்கள் தொகை அதிகரிக்கும் போது நீர் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்து விடும்.

மேலும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள், கேப்டவுன் நகரை போல் தண்ணீருக்கு தவிப்பது மட்டுமல்லாமல் மற்ற சில நகரங்களுக்கும் அதிகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இந்தியாவில் நதிகளை மக்கள் கடவுளாக கருதுகின்றனர். எனினும் நதிகளில் ஓடும் நீர் மிகவும் சுத்தமற்றவையாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் 2017-18-ஆம் ஆண்டுகளில் மிகவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனால் அந்த நகரம் ஒருநாள் முழுவதும் தண்ணீரே பயன்படுத்தாமால் 'Day Zero' என்று அனுசரித்தது. இதன்மூலம் அங்கு தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.