இந்தியா

விரைவில் சென்னையை முந்த உள்ளது ஹைதராபாத்..!

விரைவில் சென்னையை முந்த உள்ளது ஹைதராபாத்..!

Rasus

சென்னை விமான நிலையத்திற்கும் வந்து செல்லும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவை சந்தித்துள்ளதால் விரைவில் சென்னையை ஹைதரபாத் முந்த உள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டெல்லி. அதற்கு அடுத்தப்படியாக இருப்பது மும்பை மற்றும் பெங்களூரு. விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமான இயக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் விமான நிலையத்திற்கு வந்த செல்லும் பயணிகள் அடிப்படையில் பார்த்தால் 6-வது இடத்தில் உள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கொல்கத்தா விமான நிலையம் 5-வது இடத்திலும், விமானங்கள் இயங்கும் அடிப்படையில் 6-வது இடத்திலும் உள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சமீபத்தில் தரவு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், சென்னை விமான நிலையத்தை விட ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஏப்ரல் வரை, 13.8 லட்சம் உள்நாட்டு பயணிகள் ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணம் செய்திருப்பதாகவும், அதேசமயம் சென்னை விமான நிலையத்தில் 13.5 லட்ச உள்நாட்டு பயணிகள் மட்டுமே பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 1 வருட காலத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் சென்னையை பொறுத்தவரை 13.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதன்மூலம் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் அடிப்படையில் ஹைதராபாத் விமான நிலையம் விரைவில் சென்னை மற்றும் கொல்கத்தாவை முந்திவிடும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்வதேச பயணிகள் அடிப்படையில் சென்னை 4-வது இடத்தில் தொடர்வதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடத்திற்கு முன்னதாக பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெங்களூருவிற்கு விட்டுத் தந்து 4-வது இடத்திற்கு பின்தங்கியது சென்னை. தற்போது அந்த இடத்திற்கும் ஹைதராபாத் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மற்ற விமான நிலையங்களை விட உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பிரச்னை சென்னை விமான நிலையத்தில் உள்ளதாக தெரிவித்தார். அத்தோடு மட்டுமில்லாமல் எதிர்கால திட்டம் எதுவும் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டார். பரபரப்பான நேரத்தில் விமான நிலையங்களை நிறுத்தி வைக்க போதிய இடம் இல்லாததும் ஹைதராபாத் போன்ற இடத்திற்கு அவை செல்வதற்கான காரணம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.