Chaithra kundapura twitter
இந்தியா

கர்நாடகா: பாஜகவில் சீட் வாங்கித் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.7 கோடி மோசடி! - 4 பேர் கைது

பாஜகவில் எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.7 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

Prakash J

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பைந்தூர் தொகுதியில் பாஜகவில் எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூபாய் 7 கோடி மோசடி செய்ததாக நான்கு பேர், நேற்று இரவு (செப்.12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chaithra kundapura

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபரான கோவிந்த் பாபு பூஜாரி என்பவர், இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள பந்தேபால்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், ” ‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைமைக்கு நெருக்கமானவர்’ என்று கூறிய சைத்ரா குந்தாபூர், தம்மை பைந்தூரில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வற்புறுத்தினார். அதற்காக தம்மிடமிருந்து ரூபாய் 7 கோடியை 3 தவணையாகப் பெற்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் முக்கிய நபராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரான சைத்ரா குந்தபுரா கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஸ்ரீகாந்த் நாயக் பெலத்தூர், ககன் கடூர், பிரசாத் பைந்தூர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 406, 419, 420, 170, 506 மற்றும் 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.