கருப்பு பூஞ்சை எனப்படும் முகோர்மைகோஸிஸை, பெருந்தொற்று நோயாக அனைத்து மாநிலங்களும் அறிவிக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “சமீப காலமாக புதிதாக ஒரு பூஞ்சை தொற்று அதிகமாக பரவிவருகிறது. முகோர்மையோஸிஸ் எனப்படும் அந்த தொற்று, கருப்பு பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து முகோர்மையோஸிஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா நேரத்தில் இந்த வைரஸ் பரவுவதால், புதிதாக நிறைய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தொற்று, மிகத்தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்டீராய்டு தெரபி மூலம் அதிகப்படியான ஸ்டீராய்டு தரப்பட்டபவர்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது” எனக்கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் லாவ் அகர்வால் கூறும்போது, “ஏற்கெனவே நோயாளி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவருக்கு கருப்பு பூஞ்சையும் ஏற்படுகிறது என்பதால் நோயாளி மிகவும் பலவீனமாக இருப்பார். பலவீனமான ஒருவர் கடுமையாக பாதிக்கப்படுவதால், இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது” எனக்குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்த நோய்க்கான சிகிச்சையில், கண் மருத்துவர் – காது, மூக்கு, தொண்டைக்கான மருத்துவர் – பொதுநல அறுவை சிகிச்சை நிபுணர் – நரம்பியல் நிபுணர் – பல் மருத்துவர் – முக அறுவை சிகிச்சை நிபுணர் என பலரும் இணைந்து செயலாற்ற வேண்டும். கூடுதலாக சில பூஞ்சை தொற்றுக்கு எதிரான மருந்து மாத்திரைகளையும் கொடுக்க வேண்டும்.
இந்த அளவுக்கு சிறப்பம்சங்கள் தேவைப்படுகிறது என்பதால், இதை கூடுதல் கவனத்தோடு நாம் கையாள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி, “தொற்றுநோய்கள் சட்டம் 1897 – ன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பை பெருந்தொற்று நோயென அறிவிக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் என அனைத்து மருத்துவ சேவையாற்றுபவர்களும் நோய்த்தடுப்புக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அளித்திருக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அனைத்து தரப்பட்ட மக்களுக்கும், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான வசதிகளை செய்து தரப்பட வேண்டும். மாவட்ட தலைமை மருத்து அதிகாரி மூலம், நோய் பரவுதல் கண்காணிக்கப்பட்டு, சிகிச்சைகள் தரப்பட வேண்டும்” எனக்கூறிப்பட்டுள்ளது. நோயாளிக்கு தெரியவரும் கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள் பற்றிய தகவல்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்துக்கு முன்னராகவே ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள், கருப்பு பூஞ்சையை பெருந்தொற்றாக அறிவித்துவிட்டன என்பது கவனிக்கத்தக்கது.