ஒவ்வொரு மாநில அரசும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநில தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்களை அழைத்துக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து விரிவான சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. அதில் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மக்களை சம்மந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலை பெற்று அழைத்துக் கொள்ளலாம். இப்பணியை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். எனினும் அழைத்து செல்லப்படும் நபர்களுக்கு பரிசோதனைகள் செய்து கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பட்சத்தில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்ட பேருந்துகள் மூலமே போக்குவரத்து இருக்க வேண்டும் என்றும் போதிய தனி மனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.