வறட்சி நிவாரண நிதியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.2160 கோடியை ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனிடையே மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவுவதால், மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி ஒதுக்க தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி தேர்தல் ஆணையமும் விதிகளை தளர்த்தியிருந்தது.
இந்நிலையில் வறட்சி நிவாரண நிதியாக மகாராஷ்டிரா அரசுக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.2160 கோடியை ஒதுக்கியுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவிற்கு மட்டும் மத்திய அரசு ரூ.4248.59 கோடியை வறட்சி நிவாரண நிதியாக அறிவித்துள்ளது. இதனிடையே கூடுதல் நிவாரண நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 151 தாலுக்காகளை வறட்சி பாதித்த பகுதியாக மகாராஷ்டிரா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.