இந்தியா

செங்கோட்டை சம்பவத்தை பயன்படுத்தி மத்திய அரசு விவசாயிகளை பழிவாங்க கூடாது - பஞ்சாப் முதல்வர்

செங்கோட்டை சம்பவத்தை பயன்படுத்தி மத்திய அரசு விவசாயிகளை பழிவாங்க கூடாது - பஞ்சாப் முதல்வர்

webteam

குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு விவசாயிகளை மத்திய அரசு அடியோடு அழிக்க நினைப்பது துரதிஷ்டவசமானது என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண சுதந்திரமான விசாரணையை நடந்த வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையில் நடந்த சம்பவம் விவசாயிகள் போராட்டத்தை பாதித்ததா?

ஜனவரி 26ம் தேதி செங்கோட்டையில் நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு அவமானம். சுதந்திர இந்தியாவின் சின்னம் சேதமடைந்திருக்கிறது. அதன் புனிதத்துக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இது எங்கள் மதிப்பிற்குரிய நிஷன் சாஹிப் (Nishan Sahib) கொடிக்கும் ஒரு அவமரியாதை தான். விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க சில குண்டர்களால் இது நடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் இதில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளாக இருக்க முடியாது.

ஒரு பஞ்சாபி என்ற வகையில், எனது சமூகத்தின் சார்பாக அவமதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஒவ்வொரு நாளும், தேசிய கொடி போர்த்தப்பட்டு நாட்டின் மகன்கள், எல்லைகளிலிருந்து கொண்டு வரப்படுகிறார்கள். ஆனால் இதனால் ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்துவது தவறு. அவர்களின் தேசபக்தியை கேள்விகேட்கவோ, குறைந்த மதிப்பிடவோ முடியாது. பல மாதங்களாக பஞ்சாபிலும், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளிலும் அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகள் மீது அவதூறு பரப்புவதும், அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தவதும் தவறானது.   இந்த விவசாயிகளின் மகன்கள்தான் நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.

செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல, சில சமூக விரோத சக்திகள். இந்த நடிகர் தீப் சித்துவைப் போலவே சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர் டெல்லி காவல்துறையினரால் ஒரு முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த சம்பவம் விவசாயிகளின் போராட்டத்துக்கு தற்காலிக எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றோ,  விவசாய இயக்கங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றோ நான் நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் பிழைப்புக்காகவும், அவர்களின் எதிர்கால தலைமுறையினருக்காகவும் போராடுகிறார்கள். உண்மையான விவசாயிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்களின் போராட்டத்தை இதுபோன்ற ஒரு சம்பவத்தால் முடக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

செங்கோட்டை சம்பவத்தை பயன்படுத்தி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான டெல்லி குளிரில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் வலியை பாஜகவால் மறக்கடிக்க முடியாது. விவசாயிகளின் கண்ணீரை பா.ஜ.க பார்க்கவில்லையா? 40 க்கும் மேற்பட்ட பண்ணை சங்கத் தலைவர்களில், 30 க்கும் மேற்பட்டோர் எஃப்.ஐ.ஆர் பதிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கான இடத்தை மத்திய பாஜக அரசு சுருக்கிவிட்டது.

விவசாயிகளுடன் எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை மூடுவதற்கு இந்த செங்கோட்டை சம்பவத்தை மத்திய பாஜக அரசு பயன்படுத்தினால் அது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இந்திய ஜனநாயகத்தின் மரணம் அது. கடந்த பல வாரங்களாக மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை எப்படி நடந்ததோ அதேபோல மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கு செவிசாய்க்க வேண்டும் என்று அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியையும், பிரச்னைகளையும் தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்று மட்டுமே நிரந்த தீர்வு.

விவசாய தலைவர்களை துன்புறுத்துவதற்கும் குறிவைப்பதற்கும் இந்த ஒரு சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக டெல்லி காவல்துறையோ மத்திய அரசோ பயன்படுத்தக்கூடாது என்பதையும் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.  வன்முறையைத் தூண்டிய குற்றவாளிகள், மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவம் விவசாயிகள் போராட்டத்தை அழிக்க ஒரு கருவியாக மாறக்கூடாது.

இந்த உழவர் தலைவர்களில் எவரேனும் சிக்கலைத் தூண்டும் என்பதற்கான ஏதேனும் ஆதாரம், எந்த வீடியோ காட்சிகளும் இருந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படட்டும். ஆனால் மற்றவர்களின் செயல்களுக்கு அவர்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும். உண்மையில், சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் ஈடுபாடு இந்த சம்பவத்தில் இருப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன, மேலும் பாகிஸ்தானின் தலையீடு பற்றியும் பேசப்படுகிறது. உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண முழுமையான, முறையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது இது மிகவும் அவசியமானது.

விவசாயிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனது விவசாயி சகோதரர்களிடம் நான் சொல்ல விரும்புவது, அமைதியாக இருங்கள். தீய சக்திகள் உங்களை எந்தவிதமான எதிர்வினையையும் தூண்டிவிட வேண்டாம். உங்களுக்கு பலமாக இருந்த அமைதி வழி போராட்டத்தில் உறுதியாக இருங்கள். மேலும் உலகம் முழுவதிலிருந்தும் உங்களுக்கு மகத்தான ஆதரவு பெருகி வருகிறது. மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுங்கள்.  உங்கள் பார்வையைப் புரிந்துகொண்டு, பண்ணைச் சட்டங்களை விரைவில் ரத்து செய்வதற்கான உங்கள் ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.