இந்தியா

‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

webteam

சர்தார் வல்லபாய் பட்டேலின் புகைப்படத்தை அனைத்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல்நிலையங்களில் வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இவர், பிரிந்து கிடந்த மாகாணங்களை இந்தியாவுடன் இணைத்தில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றியவர். இவருடைய பிறந்தநாளை இந்தியா அரசு தேசிய ஒற்றுமை தினமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் வரும் 31ஆம் தேதி இவரின் 144வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்தார் பட்டேலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் காவல்நிலையங்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளுக்கு ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அதன்படி, “சர்தார் பட்டேல் இந்தியாவிற்கு ஆற்றிய நற்பணியை கௌரவிக்கும் விதமாக அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை அலுவலகங்களில் வைக்க வேண்டும். இந்தப் புகைப்படத்துடன், ‘இந்தியாவின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றிற்கு பாதிப்பு விளைவிக்க யாரும் அனுமதிக்கபட மாட்டார்கள்’ என்ற வாசகத்தையும் வைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடம் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் நிறுவபட்டுள்ள சர்தார் பட்டேலின் இமலாய சிலைக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற உள்ளது. அத்துடன் அந்த நாளில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சில நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.