இந்தியா

கள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை !

கள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை !

webteam

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணக்கரையில் புதிய 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் கைதான பிரபல மலையாள டிவி., சீரியல் நடிகை மற்றும் அவரது தாயார், சகோதரி ஆகிய மூவரின் ஜாமின் மனுக்களை இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்லுபடி செய்து 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன்படி சீரியல் நடிகை உள்ளிட்ட மூவர் திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே அணக்கரையில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் இடுக்கி மாவட்டம் முருகாசேரியை சேர்ந்த லியோடாம், கருநாகப்பள்ளிடை சேர்ந்த கிருஷ்ணகுமார், புற்றடியை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் புதிய 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இடுக்கி மாவட்ட தனிப்படை போலீசார் இந்த மூவரிடமும் நடத்திய விசாரணையில், இந்த நோட்டுகள் கொல்லத்தில் இருந்து பிரபல மலையாள டிவி., சீரியல் நடிகை சூர்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது என தெரிய வரவே தனிப்படையினர் கொல்லம் விரைந்தனர்.

கொல்லத்தில் உள்ள சீரியல் நடிகை சூர்யாவின் பங்களாவை சோதனை செய்தபோது, வீட்டு மாடியில் இருந்த கள்ள நோட்டு அச்சடிக்கும் நவீன இயந்திரம், கட்டிங்க் இயந்திரம், விலை உயர்ந்த காகித சுருள் மற்றும் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விட தயாராய் இருந்த 67 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் பிரபல மலையாள டிவி., சீரியல் நடிகை சூர்யா, கள்ள நோட்டு அச்சடிக்க உடைந்தையாய் இருந்த நடிகையின் தாயார் ரமாதேவி, நடிகையின் தங்கை ஆர்யா ஆகிய மூவரையும் இடுக்கி மாவட்ட தனிப்படை போலீஸார் கைது செய்து இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அழைத்து வந்தனர்.

பின்னர் நடிகை உள்ளிட்ட மூவரும் நெடுங்கண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவர் தரப்பிலும் ஜாமின் மனுக்களை அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர் விசாரணை நடக்க இருப்பதால் மூவருக்கும் ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சீரியல் நடிகை உள்ளிட்ட மூவரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தும், மூவரையும் 15 நாள் காவலில் வைக்கவும் நெடுங்கண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சீரியல் நடிகை சூர்யா, அவரது தாயார் ரமாதேவி மற்றும் தங்கை ஆர்யா ஆகியோர் திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்,